செய்தித்தாள்
மெல்ல என்னை விழுங்கிக் கொண்டிருந்தது
அரசியல் வியாக்கியானங்கள்
சூடு பறக்க தைலம் தேய்க்கின்றன
நகைச்சுவைக்கென்று தனிப்பகுதியில்லை
அமைச்சர்களின் ஆலோசனைகள் போதும்...
நிகழப்போகாத திட்டங்களைப்பற்றிய
நிதர்சனமான கட்டுரையொன்று
இன்றிரவே கார்த்திகை செல்வன் அல்லது
செந்தில் விவாதிக்கலாம்
குழந்தை கடத்தியதாக 5 பேர் கொலை
கடத்துபவன்
இந்தச் செய்தியை வாசித்துக் கொண்டிருக்க
மிஸ் இந்தியா விரைவில்
தூய்மை இந்தியாவிற்கு விளம்பரமாகலாம்
ரஜினி வருவாரா மாட்டாரா?
கமல் என்னதான் சொல்கிறார்
விஷால் ஏன் பெரு மூச்சு விட்டார்?
இதையெல்லாம் கடந்தால் உருப்படியாக ஒரு செய்தி
'அசுரவதம்' பார்க்கலாமென்ற சினி விமர்சனம்
வேறு வழியில்லை
நாளைக்கு எப்படியாவது பார்க்க வேண்டும்...
என்னது? எட்டுவழிச்சாலை..
ரூபாய் மதிப்பிழப்பு, மணல் கொள்ளை
இவைப் பற்றியா?
பேஸ்புக், வாட்சப்பில் வரும் பார்த்துக்கலாம்.
- மு.முகமது பாட்சா*
03 /07 /2018
No comments:
Post a Comment