
இடமிருந்து மூன்றாவதாக நிற்பவன் கோபால்
நன்றாக நினைவிருக்கிறது
அவன்தான் அடிக்கடி சண்டையிடுவான்
முதலில் நிற்பவன் முத்துராஜ்
நன்றாகப் படிப்பான்
ஒருவேளை அமெரிக்காவில் இருக்கலாம்
அங்குதான் அவன் அக்காள் இருந்தாள்
இரண்டாவதாக நிற்பவனை மறக்கவே முடியாது
ஐ லவ் யூ சொல்லிவிட்டு
என் அண்ணனிடம் அடிவாங்கிய டேனியல்
நான்காவதாக நிற்பவள் நான்தான்
அப்பவே அப்படியொரு அழகியில்லையா? !
என்னருகில் நிற்பவன் என் கோபிகிருஷ்ணா...
என்' இனிஷியலல்ல என்னுடைய
நான்தான் அவனுக்கு முதலில் சொன்னேன்
நான்தான் முதலில் விருந்தானேன்
என் கோபி முன்பு போலில்லை
என்னையே அவனுக்குத் தெரியவில்லை
நானும் என்னைக் காட்டிக் கொள்ளவில்லை
இப்போதும் கூட நன்றாகத்தான் ஒத்துழைத்தேன்
அவன்தான் இயந்திரமாக இயங்கினான்...
போகும் போது மட்டும் சொல்லிவிட்டுப் போனான்
உன் போலவே எனக்குமொரு தோழியுண்டு.
- மு.முகமது பாட்சா*
25 /07 /2018
No comments:
Post a Comment