Sunday, 8 July 2018

பயமென்ற பயம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்

எல்லோருக்குள்ளும் 
ஒரு பயம் வந்து உட்கார்ந்து கொண்டது 
வார்த்தைகளை அவசரவசரமாக 
பெட்டிகளில் வைத்துப் பூட்டினார்கள் 
ஓடியோடித் தடங்களை அழித்தார்கள் 
காடுகளைப் பூட்டி 
கம்பளியால் மறைத்தபோது 
வெளியில் தெரிந்த ஒன்றிரண்டு மரங்களை 
வெட்டியெறிந்தார்கள் 
தவளைகள் 
பாம்புகளின் புற்றில் பதுங்கிக் கொண்டன 
காகங்கள் 
கூடுகளைக் கலைத்துக் கொண்டோடியது 
வேர்கள் 
எட்டிப் பார்ப்பதற்கும் பயந்தன 
நாளை இங்குத் தேடிப் பார்ப்பதற்கென்று 
எதுவுமேயிருக்காது 
கண்ணீரால் பூசப்பட்ட சாலை 
கண நேரங்களை வெகுவாகக் குறைக்கக் கூடும் 
கருப்பால் எழுதப்பட்ட பக்கங்கள்
எட்டுவழிச் சாலைகளாக நீள்கின்றன 
நாளைய செய்தியை எடுத்துப் படிக்கிறேன் 
அவை எப்போதும் காலியாகவே இருக்கின்றது. 

- மு.முகமது பாட்சா* 
08 /07 /2018 

No comments:

Post a Comment

Popular Posts