
எழுதாத அந்தக் கவிதையை
எடுத்தெறிந்து வீசி விட்டேன்
மோசமாக
என்னைப் பார்த்துவிட்டு நகர்ந்தது
காற்றில் அடித்துவந்த சில வார்த்தைகளை
பைகளில் நிரப்பிக் கொண்டேன்
பேருந்தில் ஏறும்போது
சில வார்த்தைகள் இறங்கிக் கொண்டன
யாசகம் கேட்டவனிடம்
சில்லறையைப் போட்டுவிட்டு
சில வார்த்தைகளை வாங்கிக் கொண்டேன்
சாலையில் இறந்து கிடந்த நாய்மீது
சில வார்த்தைகள் மொய்த்துக் கொண்டிருந்தன
அவள் தந்த வார்த்தைகளை
ஊதிப் பறக்கவிட்டேன்
சன்னலைவிட்டு வெளியே சென்றது
சில வார்த்தைகளை
பூக்கடையில் வாங்கி முகர்ந்து கொண்டேன்
பிழைகளையெல்லாம் நீக்கிவிட்டு
வார்த்தைகளைத் தேடினேன்
பை காற்றில் பறந்து கொண்டிருந்தது
அவள் கொடுத்த தேநீரில்
மிதந்து வந்த வார்த்தைகள்
என்னை
இரசித்துச் சுவைக்கத் தொடங்கியது.
- மு.முகமது பாட்சா*
26/07/2018
No comments:
Post a Comment