
மௌனம்
தன்னைப் பெட்டியில் வைத்துப்
பூட்டிக்கொள்கிறது
கனவுகளின் சாலை
தன்னை முடித்துக்கொள்வதில்லை
மரத்தின் வேர்களில்தான்
மலர்களின் வாசம் துளிர்க்கிறது
பூக்களின் உதிர்விற்காக
மரங்களென்றும் அழுவதில்லை
காய்களின் வருகைக்கான
கர்ப்பப்பைத் தாய்களே அதுதான்
வெளிச்சத்தைக் கடத்தவில்லையென்றால்
நிலவிற்கும் மதிப்பில்லை
மலைகள்தானேயென்று
மௌனமாகக் கடந்து விடாதீர்கள்
பூமியின் முலைக்காம்புகளைத்தான்
வீணாகச் சிதைக்கிறோம்
இயற்கையின் ஆடையை உருவிவிட்டு
புராணத்திற்குச் சேலைத் தருகிறவன்
நதிகளை அம்மணமாகப் பார்க்கிறான்
மௌனம் வெடிக்கின்ற போது
பெட்டியின் சிதறல்கள்
நம் கவனத்திற்கும் கூட வராது
இந்தக் கவிதையின் சில வார்த்தைகள்
மௌனம் காக்கின்றன...
காட்டுத்தீயின் வார்த்தைகளை
செய்தித்தாள்களில் மட்டும் கடந்து விடாதீர்கள்
..............................
- மு.முகமது பாட்சா*
04 /07 /2018
No comments:
Post a Comment