
போதி மரத்து வேர்கள்
அங்கேயே உறைந்து கிடப்பதில்லை
நீரைத்தேடிப்
பயணித்துக் கொண்டேயிருக்கிறது...
இரைதேடிச் சென்ற பறவைகள்
கூடடையும் வேளையில்
பசியோடு வந்து உறங்குவதில்லை...
அழுகின்ற குழந்தைக்கு
அம்மாவின் மடியில் பால் சுரக்கிறது...
மூலவர்
கருவறையை விட்டு வருவதில்லை
பக்தன்
அலைந்து கொண்டேயிருக்கிறான்...
விளக்கை ஏற்றாமல்
வெளிச்சங்கள் ஊடுருவுவதில்லை..
தடம் மாறும்
விரல்களில் வழியும் இசை அபஸ்வரம்..
தூங்கிய தூரிகைகளைச்
சபித்துக் கொண்டேயிருக்கின்றன
வரையாத ஓவியங்கள்...
காதலென்பதும் இடம் மாறினால்தான்
கண் திறக்கும்..
நம்பிக்கையை அணிந்தவன்
இங்கு அழகனாகிறான்...
புத்தியைச் சொல்வதால்
இந்தக் கவிதைக்குப்
புத்தன் என்று பெயர் வைத்துவிடாதீர்கள்
சித்தன் என்றும் அழையுங்கள்
காடுகளில் இவன்
நன்றாக அலைந்து திரியட்டும்.
- மு.முகமது பாட்சா*
20/08/2019
No comments:
Post a Comment