
சன்னலை இறுக மூடிவிட்டு
அசையாமல் அமர்ந்து கொள்கிறேன்...
வெளியில் இருப்பவர்கள்
என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
வியர்வை என் முகத்தைத் துடைக்கிறது...
சப்தங்களைப் பிடித்துக்
கிளிக்கூண்டில் வைத்துப் பாதுகாக்கத் தொடங்கினேன்
அது தொட்டி மீன்களிடம்
இரகசியம் பேசிக் கொண்டிருந்தது...
தவறிவிழுந்த வார்த்தைகளின் அலறல்
கதவைத் திறந்து கொண்டு
வெளியிலோட
இரண்டு நாய்கள் துரத்திச் செல்கின்றன...
என் மேசையில் இருந்த புத்தகம்
என்னை வெறித்துப் பார்க்க
ஒவ்வொரு பக்கமாகக் கிழிந்து கொண்டிருக்கிறேன்
சன்னல் திறந்து கொள்ளக்
காற்று என்னைக் கடத்திச் செல்கிறது.
- மு.முகமது பாட்சா*
04/08/2019
No comments:
Post a Comment