
தொலைக்காட்சி விரித்த செய்தியில்
ஒருவன் இறந்து கிடந்தான்...
அவனைச் சுற்றிலும்
காமிராக் கண்கள் மொய்த்துக் கொண்டிருந்தன...
ஒருவன் எழுதிய குறிப்பில்
தற்கொலை தானாகச் சேர்ந்து கொண்டது...
மற்றவன் குறிப்பில்
விபத்து வந்து மோதியது...
அடித்துவிட்டுப் போன வண்டிக்கு
எண்கள் இல்லை என்று பேசிக் கொண்டார்கள்...
இறந்தவன்
தீவிரவாதியாக இருக்க வாய்ப்புண்டு...
என்று ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார்..
இவன் போராளி என்று
பொதுஜனத்தில் ஒருவன் கிசுகிசுத்தான்..
முக்கியச் செய்தியில்
இறந்தவன் மனைவிக்குக் கள்ளத்தொடர்பு
என்று ஓடிக் கொண்டிருக்க...
தடையங்களை நாய்கள்
நாக்கால் நக்கி அழித்துக் கொண்டிருந்தன...
- மு.முகமது பாட்சா*
21/08/2019
No comments:
Post a Comment