
என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்
அவர்கள்
கைகளை உயர்த்தி முழக்கம் செய்கிறார்கள்
பெல்லட் குண்டுகள் சிதறி விழுகின்றன
துப்பாக்கி வீரனின்
மகள் எழுதிய கடிதம் கண்ணீர் வடிக்க...
விழுந்து கிடந்த போராட்டத்தை
மடியில் வைத்து அழுகிறான்...
காளி வாசலின் தூளியில்
தொப்பியொன்று இரத்தம் தோய்ந்து கிடக்கிறது...
நாய்களெதுவும் சாகவில்லை...
ஐக்கிய நாடுகள் விவாதிக்கின்றன...
அழுக்குப் படியாத சட்டைகளுடன் தலைவர்கள்...
இரத்தப் பொரியல்
சுவையாக இருந்ததாகச் சொன்னவன்
செத்தொழியட்டும் பீடைகள் என்றான்
பல் குச்சி அவன் ஈறுகளைக் காயப்படுத்தியதில்
சீழ் வடிந்து கொண்டிருந்தது...
பர்ஜானாவிற்கு
ஆறுதல் செய்து கொண்டிருந்தாள் அமிர்தா...
தூரத்தில் துப்பாக்கிகளின் ஓசை
பிரதமர் கொடியேற்றி உரையாற்றுகிறார்...
எல்லாம் வெவ்வேறு காட்சிகள்தான்
ஒன்று படுத்திவிடாதீர்கள்
இஃது ஒருங்கிணைந்த இந்தியா...
குப்பை வண்டி நகர்ந்து செல்கிறது நாற்றம் சுமந்து
- மு.முகமது பாட்சா*
17/08/2019
No comments:
Post a Comment