Tuesday, 6 August 2019

உயிர்ப்புடன் ஒரு மண்கட்டி



அவர் இறந்து விட்டதாகச் சொன்னார்கள் 
அவரின் பெயர் இப்போது எக்ஸ் 
நூறைக் கடந்தவர் என்று சொல்லும் போது 
பெருமையாக இருந்தது... 
பார்த்துப் பார்த்துச் சலித்ததால் இருக்கலாம் 
யாரும் அழவேயில்லை... 
அவர் யாரென்று கேட்டேன்... 
அதோ நிற்பவனின் தாத்தா என்றார்கள் 
சிலர் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள் 
அவர்களிடம் சென்று 
அவர் யாரென்று கேட்டேன்... 
நண்பனின் கொள்ளு தாத்தா என்றார்கள் 
அடக்கம் செய்வதற்கான வேலைகள் 
நடந்து கொண்டிருந்தன... 
இவரது மகன் என்ன செய்கிறார் என்றேன்... 
அவர் இவருக்கு முன்னமே 
இறந்துவிட்டதாகச் சொல்லிச் சிரித்தார்கள்... 
கஃபன் விட்டு 
கலிமா ஷகாதத்தோடு தூக்கி நகர்ந்தார்கள்... 
ஒருவர் மட்டும் 
அழுதுகொண்டே கூட நடந்து வந்தார்... 
இவர் யாரென்று அவரிடம் கேட்டேன்... 
நான் வாழ்வதற்கு 
உதவி செய்த மகான் என்று சொல்லிவிட்டு அழுதார்... 
கபர் குழி 
எக்ஸை பெருமையாக ஏற்றுக் கொண்டது... 
அதில் விழுந்த மண்கட்டிகளில் 
ஒரு கட்டி மட்டும் உயிர்ப்புடன் துடித்தது.

- மு.முகமது பாட்சா*
03/08/2019

No comments:

Post a Comment

Popular Posts