
சுவனத்தின் வரையறை
இதுதானென்று யூகித்தவன்
நான்கைந்து கள்ளிச்செடிகளை
வீட்டிற்குள் நடவு செய்தான்...
பசிக்கழுத குழந்தைகளை வெட்டி
கள்ளிகளுக்கு எருவூட்டினான்...
பன்றிகளுக்கெல்லாம்
பஞ்சணையில் வைத்து பால் புகட்டினான்...
நரிகளை
நாய்களென்று பெயர் மாற்றம் செய்து
காவலுக்கும் கட்டி வைத்தான்...
கடவுளுக்கும் கேட்காத கதையொன்றை எழுதி
காவியம் என்று தொங்கவிட்டான்...
வாழ்க கோசம் வளமானபோது...
அந்த வீட்டிற்கு
இறைவன் இல்லம் என்று பெயரிட்டான்...
ஒரு நாள்
முற்றத்தில் அமர்ந்து கொண்டவன்
நான்தான் கடவுள் என்றபோது...
நகரம் மெல்ல அழுகிக் கொண்டிருந்தது
நரகத்தின் துர் நாற்றம் தாங்காமல்.
- மு.முகமது பாட்சா*
10/08/2019
No comments:
Post a Comment