Tuesday, 5 March 2019

காய்கள் நகர்கின்றன (தேர்தல் சிறுகதைகள்) 1

காய்கள் நகர்கின்றன...
----------------------   
பொம்மலாட்டம் க்கான பட முடிவு
  தேர்தல் தேதி வேறு அறிவித்து விட்டார்கள்! இன்னமும் கூட்டணி பேச்சு வார்த்தைகள் 
இழுபறியிலேயே நீடிக்கிறது. இந்த நேரத்தில் இது வேற!

     'தலைவர் நாகா' என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப் படும் நாக நாதன் 
மிகுந்த குழப்பத்தில் இருக்கும் போதுதானா இப்படி ஒருச் செய்தி வரவேண்டும்? 
"யோவ், அந்த இராமசாமி வந்தானாயா?'

       "சொல்லிட்டேன் தலைவரே, இன்னமும் அஞ்சி நிமிஷத்தில வந்திடுவாரு! 
கிளம்பிட்டாராம்" - நாகாவின் செயலாளர் கதம்பம் .

     செயலாளர் சொல்லி முடிக்கவும் இராமசாமி உள்ளே வரவும் சரியாக இருந்தது. 
 தலைவர் உட்காரச் சொல்லியும் உட்காரவில்லை இராமசாமி. அமைச்சர்கள் 
அவர் எதிரில் உட்காருவது அவருக்கு பிடிக்காது என்பது இராமசாமிக்கு 
நன்றாகவேத் தெரியும்.

     "கதம்பம், கொஞ்சம் வெளியே இருங்க, பிறகு கூப்பிடறேன்!" - 
செயலாளரை வெளியே அனுப்பினார்.
   
இராமசாமி, கதவை மூடிட்டு வாயா! கதம்பம் லேஸ் பட்ட ஆளில்ல, 
ஒட்டுக் கேட்டாலும் கேட்பான்! "  இராமசாமி கதவை மூடிட்டு வந்ததும் -   
"யோவ் நீ என்னதான் நினைச்சிட்டிருக்கே? நீ இப்படி பண்ணுவேன்னு 
நான் கொஞ்சமும் நினைச்சி பாக்கலைய்யா!"

- "என்னான்னு தெளிவாச் சொன்னாத்தானே தலைவர புரியும்? !"

- " உன் தம்பி , நீலகிரி எஸ்டேட்டில ஒரு காபி எஸ்டேட்டை வளைச்சி போட்டிருக்கான்! 
மதிப்பு 20 கோடியாம்! உனக்கு தெரியுமா? தெரியாதா? "

 "என்னய்யா, சொல்றீங்க ! உண்மையிலேயே எனக்குத் தெரியாது தலைவரே! 
புரளியா இருக்கும் தலைவரே!" சும்மா அதிர்ந்தது போல் நடித்தார் இராமசாமி.

"ரொம்ப அதிகமா நடிக்காத இராமசாமி! உன்னை பத்தி எனக்கு நல்லாவேத் தெரியும்! 
ரிஜிஸ்தார் பத்திரத்தை பார்க்கிறீயா?" - மேசையின் டிராயரைத் திறந்து 
ஒரு பத்திரத்தின் நகலை வெளியே எடுத்துப் போட்டார்.

சத்தியமா எனக்குத் தெரியாது தலைவரே! இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை! 
நான் அவனை இது பற்றி கேட்கிறேன் தலைவரே!"

"உன் சத்தியத்தை உடைப்பில போடுய்யா! பதவி ஏற்கும் போது நாம பண்ற 
சத்தியத்தை பற்றி எனக்குத் தெரியாதா!"

இராமசாமிக்கு வியர்த்துக் கொட்டத் தொடங்கியது.

"ஏன்யா, உனக்கு தெரியாதுன்னு சொல்றீயே! நீ என்ன மிட்டா மிராசு குடும்பத்திலயா பொறந்த? 
நீ சாதாரணமா ஒரு டீக் கடை வைச்சிருந்தே!
உன் தம்பி ஒரு ஜவுளிக் கடையில வேலை செஞ்சான்.எல்லாம் இந்தக் கட்சிக்கு வந்த 
பொறகுதானே சேர்த்தீங்க? உனக்குத் தெரியாதுன்னுச் சொல்றே!"
-நாகாவின் கண்கள் கோவைப் பழமாகச் சிவந்திருந்தது.

"நீங்க கோவப் படாதீங்கத் தலைவரே! நான் என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன்," 
- இராமசாமி எப்படியாவது சப்பைக் கட்டு கட்டலாம் என்று முயற்சி செய்தார்.

"நான் கோவப் படறது இருக்கட்டும்! உன் மாமன் எதிர்க் கட்சிக் காரன் தயாகரன் கிட்ட 
இந்த டாக்குமென்ட் எல்லாம் மாட்டியிருக்கே என்னச் சொல்லப் போறே? 
நாளைக்கு பிரஸ் மீட்டைக் கூட்டி உன்னோடு சேர்த்து என்னையும் காய்ச்சப் போறான்! 
தெரியுமா?"

"உண்மையாவத் தலைவரே! மன்னிச்சிடுங்க தலைவரே. அந்த நாய் இந்த நேரத்தில 
ரிஜிஸ்தர் வைச்சிப்பானா? நீங்கதான் எப்படியாவது சமாளிக்கணும் தலைவரே!" 
- சாஷ்டங்கமானார் இராமசாமி.

" உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சாமர்த்தியமய்யா! எனக்கு கூடத் தெரியாமா 
இவ்வளவு பெரிய சொத்துன்னா? எங்கேய்ய அடிச்சிங்க  இவ்வளவு பணத்தை ? 
என் கமிஷனை முழுசா முழுங்க பார்த்திருப்ப! எப்படியாயிருந்தாலும் 
என் பார்வைக்கு வராமப் போயிடுமா என்ன? !"

அமைதியாக இருப்பதுதான் இப்போதைக்கு நல்லதென்று இராமசாமி அமைதியாக 
கையை கட்டிக் கொண்டு நின்றார். கொஞச நேரம் ஏதோ யோசித்தவராக குறுக்கும் 
நெடுக்குமாக நடந்தார் நாகா. 

"இதப் பாரு இராமசாமி இப்ப ஒரே ஒரு வழி மட்டும்தான் இருக்கு. சொல்றதுக்கு 
எனக்கே கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. வேற வழியேயில்லை. உன்னை கட்சியின் 
எல்லா பொறுப்பிலயிருந்தும் இப்ப நீக்கிடறேன். இது விஷயமா ஒரு டம்மி கமிஷன் வைச்சி 
பிறகு ஏதாவது காக்கு மோக்கு பண்ணி உன்னை இதிலயிருந்து மெதுவா மீட்டிடறேன். 
இத விட்ட வேற வழியில்ல. என்னச் சொல்றே?"

வியர்வையை துடைத்துக் கொண்ட இராமசாமி, "எதையும் கொஞ்சம் யோசிச்சி செய்யுங்கத் 
தலைவரே!" - என்றுச் சொல்லிவிட்டு தலைவரின் மறு பேச்சிற்கும் காத்து நிற்காமல் கொஞ்சம் 
கோபத்துடன் வெளியேறினார்.

இதற்கு மேல் அங்கேயே நின்றால் அந்த சொத்தை தன் பேருக்கு மாற்றிக் கொண்டாலும் 
மாற்றிக் கொள்வார் என்பது இராமசாமிக்கு நல்லாகவேத் தெரியும்.

இராமசாமியின்  இந்தச் செய்கை நாகாவிற்கு பிடிக்கவில்லை என்பது அவரின் முகத்தில் 
நன்றாகவேத் தெரிந்தது. கதம்பத்தை உடனே கூப்பிட்டு கவர்னர் மீட்டிங்கிற்கு 
ஏற்பாடுச் செய்யச் சொன்னார்.

(2)

பத்திரிக்கைகளிலும், டிவி, சோஷியல் மீடியாக்களி லெல்லாம் 'இராமசாமியின் பதவி பறிப்பு 
பற்றிய பிளாஷ் நியூஸ்   விவாதங்களோடு நகர்ந்து கொண்டிருந்தது.

நாகாவின்  நண்பரும் அரசியல் ஆலோசகருமான கூட்டு களவானி சசிதரன் , " நல்ல வேளை 
செய்ஞ்சிங்க நாகா. அவன் சொத்து வாங்கினது மட்டுமில்லாமல் அடுத்த முதல்வர் அவன் 
தான்னு மாவட்டத்தை வைச்சி கோஷம் போட வைச்சிருக்கான். என்னத் தைரியம்!  நீங்க 
ஜெயிலுக்கு போன போது அவனை ஒரு நாள் சிஎம் மா இருக்க வைச்சே யில்ல அந்தக் 
கொழுப்புதான்!"

"சரி விடு சசி. அவனால நாம எல்லாரும் மாட்டிக்க பார்த்தோம். நானும் கூட்டுதான்னு 
தயாகரன் இன்னேரம் ஒரு ஸ்டேட்மென்டையே  ரெடி பண்ணியிருப்பான். 
முதல்ல நம்ம ஓட் பேங்கை காப்பாத்தியாகணும். அதுக்கு ஏதாவது 
ஒரு ஐடியா சொல்லு!"- நாகா

"இந்த தடவை நீ எந்த மறுப்பும் சொல்லக்கூடாது நாகா. எனக்கும் சீட்டுக் கொடுக்கிற!  
இவ்வளவு காலமா  நானும் உன்னோடு சேர்ந்துதான் தொடர்ந்து வரேன். 
மத்தவங்க ஏதாவது சொல்வாங்கன்னு என்னையும் ஒதுக்கியே வந்திருந்த . 
இப்பல்லாம்  உனக்கும் அடிக்கடி உடம்பு முடியாமப் போயிடுது. இதுதான் சமயம்ன்னு  
இராமசாமி மாதிரி ஆளுங்க, நாளைக்கு உனக்கு ஏதாவது ஆயிடிச்சின்னா, கட்சியை 
அப்படியேக் கொண்டு போய் தயாகரன் கிட்ட கொடுத்திடுவாங்கா!. நல்லா யோசிச்சி 
பார்த்து முடிவெடு." - சசிதரன்

"உண்மைதான் சசி. நானும் இத பத்தி யோசிச்சிகிட்டுதான் இருக்கேன். நானும் 
முடிவெடுத்திட்டேன் , இந்த தடவை நீ நிக்கிற. ஒரு வேளை நாம ஜெயிச்சோம்னா நீ தான் 
துணை முதல்வர்." - நாகா.

"அதென்ன ஜெயிச்சோம்னா? கண்டிப்பா ஜெயிப்போம் கவலையை விடு" - சசி, நாகாவிற்கு 
நம்பிக்கையைக்  கொடுத்தான்

"எனக்கென்னவோ டவுட்டாவே இருக்கு சசி. நாம இந்த தடவை ரொம்ப ஆடிட்டோமோன்னு" - 
நாகா

"நாகா, கவலையை விடு! எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன். இந்த ஜனங்களை பத்தி 
உனக்கு தெரியாதா? காசை விட்டெரிஞ்சா எல்லாத்தையும் மறந்திடுவானுங்க. பணம் 
நமக்கென்ன பெரிசா என்ன? நீ ஹாயா இரி எதையும் போட்டு குழப்பிக்காத! பிரச்சாரத்துக்கு 
மட்டும் நீ வந்தாபோதும்! மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்" - சசி

(3)

"....நீ வந்தா போதும் ! மத்ததெல்லாம் நான்பார்த்துக்கிறேன்"னு சசி சொல்லிட்டான் . 
தலைவரும் அதான் சரின்னு முடிவு பண்ணிட்டாரு! இப்ப நீங்க என்னப் பண்ணப் போறீங்க?" -  
கதம்பம் அங்கு நடந்த விஷயத்தை ஒன்று விடாமல் அப்படியே ஒட்டுக் கேட்டு வந்து 
இராமசாமியிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தான்.

"எனக்கு இத மாதிரியெல்லாம் நடக்கும்னு முன் கூட்டியேத் தெரியும் கதம்பம்! 
நீ, அவன் ஆளுன்னு நினைச்சிகிட்டிருக்கான்! சரியான நேரத்தில சரியான விசயத்தைதான் 
கொண்டுவந்திருக்க. வேற வழியிலதான் அவனை மடக்கணும்" - இராமசாமி

இராமசாமிக்கு நாகாவின் மேலான கோபம் தணியவில்லை, " என்னவெல்லாம் பேசறான்! 
இவன் என்னவோ யோக்கியம் மாதிரி! இவன் மட்டும் அப்படியே ராஜ வம்சத்தில பொறந்தவன் 
மாதிரியில்ல பேசறான்!  இவனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சொத்து வந்தது? போதாதுக்கு 
கூட்டுக் களவானி சசி வேற ! அழிவு வந்திடுச்சி கதம்பம்!" 

" சரிங்க, இப்ப என்ன பண்றதா உத்தேசம்?" - கதம்பம்.

"நாளைக்கு பாரு கதம்பம், கிளைமேக்ஸ! "

(4)

'மக்களே நலன்' கட்சி அலுவலகத்தின் வாயிலில் பத்திரிக்கைகளும், மீடியாக்களும் பரபரப்பாக 
இயங்கிக் கொண்டிருந்தன 

இராமசாமியும், நாகாவால் சசியின் ஆலோசனையில் பதவி பறிக் கொடுத்த மற்றும் இரண்டு 
மந்திரிகள், சிலமாவட்டங்கள்,  சில ஆயிரம் தொண்டர்களோடு தலைவர் தயாபரன் முன்பாக 
மக்கள் நலன் கட்சியில் இணைந்தார்கள்.

செய்தியாளர்களை சந்தித்த இராமசாமி, 'நாகா தங்களை ஒரு அடிமை போல் 
வைத்திருந்ததாகவும், மக்களுக்கான  உதவித் திட்டங்களை சரிவர செய்யவில்லையென்றும், 
நாகாவிற்கு பதில் அந்த கட்சியில் சசிதரன் தான் எல்லாமுமாக இருப்பதாக' பேட்டிக் கொடுத்துக் 
கொண்டிருந்தார்.

மேலும் இந்த தடவை தயாபரன் ஆட்சிதான் வரும் என்று முழக்கமிட்டார்.

இதை நாகா , சசி , கதம்பம் மூவரும் தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"ச்சேய், இவன் இப்படி பண்ணுவான்னு நான் கொஞ்சமும் எதிர் பார்க்கல சசி, எவ்வளவு 
அனுபவிச்சிருப்பான்! நன்றிக் கெட்டத் துரோகி!" - நாகா கோபத்தின் உச்சத்தில் இருந்தார்.

" அட வுடுங்க நாகா. சனியன் ஒழிஞ்சதின்னு விட்டுத் தொலைங்க! நான் தான் அன்னைக்கே 
சொன்னேனில்ல,  அவன் ஏற்கனவே தயாக்கிட்ட பேசிட்டான் " - சசி தூபம் போட்டுக் 
கொண்டிருந்தான்.

'எப்படியும் கட்சியை உங்கிட்டேயிருந்து சீக்கிரம் பிடுங்குறேன் நாகா! எனக்கான தருணம் 
இதுதான். பணம் காய்க்கும் அரசியல்ல நானும் உனக்கொரு துரோகிதான்' - மனதிற்குள்ளாக சசி 
சிரித்துக் கொண்டான்.

'தயாபரன் கட்சி மட்டும் ஜெயிக்கட்டும். எனக்கும் எதாவது ஒரு போஸ்ட் நிச்சயம் இருக்கு! 
தயாவே போன்ல உறுதியா சொல்லிட்டாரு!' - சந்தோஷத்தை வெளியேக் காட்டிக் கொள்ளாமல் 
விசுவாசிப் போல் கைக் கட்டிக் கொண்டு நின்றான் கதம்பம்.

(5)

இராமசாமிக்கு சொத்தைக் காப்பாற்றிக் கொள்ள நன்றாகவேத் தெரிந்திருந்தது. 
நாகாவால் தான் சொத்து வாங்கியதை பகிங்கரமாகச் சொல்ல முடியாது. 
அவர்களின் சொத்துப் பட்டியல் இராமசாமியிடமும் நகலாய் இருக்கிறது. 

தயாபரனுக்கு இப்போதையத் தேவை அரசியல் ஆதாயம் மட்டுமே. முக்கியமான ஆள் தன் 
கட்சியில் இணைந்ததால் அந்தக் கட்சியின் இமேஜை எளிதில் உடைக்க முடியும். அதனால் 
அவரும் இந்தவிவரத்தை வெளியிடமாட்டார். 

இராமசாமி தனக்குத் தானே தட்டிக் கொண்டார், "பிண்றடா இராமசாமி!"

........................முகமதுபாட்சா*-----------------------

No comments:

Post a Comment

Popular Posts