
என் மூளையில் நீங்கள் சிந்திக்கிறீர்கள்
என்னைச் சுற்றிலும்
படர் வேலிகள் போடப்பட்டிருக்கின்றன...
நானொரு கைதியாக இருக்கலாம்
தாகத்திற்கான தண்ணீர் கிடைப்பதேயில்லை
எனக்கு இரண்டு சிறகுகள் இருந்ததாக
என்னோடு வசிக்கும் காகம் சொல்கிறது
நான் ஒரு விலங்கு தானென்று
எள்ளி நகைக்கும் எலி
வால் இருந்ததாகவும் வாதாடுகிறது...
நான் அழுக்காக இருப்பதால்
சாக்கடை புழுவாக இருந்திருக்க வாய்ப்புண்டு
எனக்கான கனவுகளைத்
தட்டில் தொங்க விட்டிருக்கிறார்கள்
நான் எட்டி எட்டி எம்புவதால்
நாக்கில்
நீர்வடிக்கும் நாயாக இருந்திருக்கலாம்...
நான் அரசனென்று
ஒரு கல்வெட்டில் எழுதப்பட்டிருக்கிறது...
அதன் கீழ் என்தலை
அங்குமிங்கும் உருண்டு கொண்டிருக்க...
அதனால்
எனக்கொன்றும் கவலையில்லை...
என் மூளையில் நீங்கள் சிந்திக்கிறீர்கள்.
-மு.முகமது பாட்சா*
05/03/2019
No comments:
Post a Comment