
பூத்தொடுக்கும் லாவகத்தோடு
சொற்கள்
தங்களைப் பின்னிக் கொண்டிருக்க...
அவை அத்தனையும்
புன்னகை முலாம் பூசப்பட்டிருக்கிறது...
சொற்களை ராகமாக்கி
காதுகளில் நுழைத்துக் கொண்டவர்கள்
சுவனத்திற்குள் நுழைந்து
கனவாகிக் கரைந்து கொண்டிருக்கிறார்கள்...
மதுக்குடுவையில் ஊறிய சொற்களைச்
சோமபானமாகச் சுகம் கூட்டிப் பருக
ரம்பை ஊர்வசி ஜதிகளின் யவனத்தில்
சொற்கட்டுகள் சிதறி விழுகின்றன...
தேவதூதர்களின் வாகனம்
சொற்களை ஏந்தி நரகத்திலெறிகிறது...
அனல் தீ சூழ்ந்து கொள்ள
அலறியழும் ஆத்மாக்களிடம்
கையசைத்து விடைபெறுகிறவர்கள்
நிச்சயம்
கடவுள்களாக இருக்க வாய்ப்பில்லை.
- மு.முகமது பாட்சா*
06/03/2019
No comments:
Post a Comment