Wednesday, 20 March 2019

நான் ஆடு

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

அஃதொரு அவசர கூட்டமாகத்தான் இருக்கவேண்டும். 
நான் எப்படி வந்தேன் என்பது தெரியவில்லை. 
அதில் உயரமாகவிருந்தவன் தன்னை 
XZ என்று சொல்லிக்கொண்டான். 
அடிக்கடி ஒப்பனை செய்து கொண்டிருந்தவள் 
நிச்சயம் நடிகையாகத்தான் இருக்கமுடியும். 
அவள் பிரதேசங்களை ரசிக்கும் சூழல் அங்கில்லை. 
குள்ளமாக இருந்தவன் தன்னை 
வெங்காயம் என்று அறிமுகம் செய்து கொண்டான். 
அடுத்த மேசையில் இருந்தவன் 
போதையில் இருந்து கொண்டே 
தன் பெயர் கங்கை என்றான்.. 
எல்லோரும் இப்போது என்னைப் பார்த்தார்கள்.. 
என் பெயர் நிச்சயம் தெரியவில்லை. 
முன்பு ஆடென்று கூப்பிட்டதாக நினைப்பு. 
அதையே சொன்னேன். 
இப்போது சூடான பாலில்லாத தேநீர் வந்தது. 
அதைக் கொண்டு வந்தவன் iam servent என்றான். 
காவலாளி கண்ணாடி வழியே பார்த்துக் கொண்டிருந்தான். 
எதை எதையோ பேசினார்கள். 
அவர்களின் அந்த மொழி நான் அறியாதது. 
எனக்கான மேசையில் உணவுத் தட்டுகள் நிறைந்திருந்தன... 
நான் விரும்பிச் சாப்பிட்டேன். 
புரையேறும்போது நடிகை என் தலையில் தட்டினாள். 
அழுத்தம் சுகம். 
திடீரென்று விளக்குகள் அணைந்து எரிந்த போது 
அங்கு யாருமில்லை... 
அவர்களின் பேச்சுகள் மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தன... 
நச்சென்று ஒரே வெட்டு 
என் தலை என்னைப் பார்த்துச் சிரித்தது... 
வெட்டியவனைப் பார்க்க முடியவில்லை... 
என்ன நடந்ததென்று புரியாமல்
உங்களை மாதிரிதான் 
நானும் விழித்துக் கொண்டிருக்கிறேன்.

- மு.முகமது பாட்சா*
19/03/2019

No comments:

Post a Comment

Popular Posts