
சுத்தமான மலைத்தேனை எடுத்துவந்து
வார்த்தைகளில் குழைத்துக் கொடுக்கிறார்கள்...
வீதிகளில் சந்தனம் தெளிக்கப்படுகிறது,
ஏழைகள் இறைகளாக அவதாரமளிக்க
ஆரத்தித்தட்டுகளில் விழுகிறது காணிக்கை...
பிரபஞ்ச மோட்சம் கேட்டுக்
கால்களில் விழுகிறவர்கள் கதறுகிறார்கள்..
கேள்விகள் கேட்ட கடவுள்கள்
கடத்தப்பட்டுக் காணாமல் போனது வேறு கதை...
கும்பிடும் கைகள்
கடாட்சம் கேட்டு கைகளைக் கூப்பியுயர்த்த...
அருள் பாலிப்பவர்கள்
அந்தகாரத்தில் வெளிச்சம் கேட்டு அமர்ந்திருக்க
வக்கிரம் ஒரு மூலையில்
உதிரத்தைச் சுவைப்பதற்காக
நாக்கினைச் சுழற்றிக் கொண்டிருக்கிறது.
-மு.முகமது பாட்சா*
26/03/2019
No comments:
Post a Comment