
அந்தச் சாலையை
வியப்புடன் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்
அங்குதான் அந்த மாளிகை
எல்லோரையும்
வியப்பாகப் பார்த்துக்கொண்டு நிற்கிறது...
அந்த மாளிகையில்
ஒரு கனவு வாழ்ந்து கொண்டிருந்ததாக
எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்...
அது ரதமேறி வெளியில் வரும்போதெல்லாம்
ஏக்கங்கள் கைகூப்பி நிற்கும்...
வஞ்சங்கள் தரையில் விழுந்து தரிசிக்க
துரோகம் மட்டும் கூடவே பயணித்ததாக வரலாறு...
காற்றடித்த ஒரு நாளில்
கனவு உதிர்ந்து காணாமல் போனது....
வஞ்சங்கள்
புதிய கனவுகளை ஒட்டிக்கொள்ள
ஓடாத தேருக்கு
ஒன்பது பேர் காவல் காக்கிறார்கள்...
மாளிகை மட்டும்
கறையான்களுடன் இப்போதும் நிமிர்ந்து நிற்கிறது.
-மு. முகமது பாட்சா*
22/03/2019
No comments:
Post a Comment