
இப்போதெல்லாம்
கால்களை நன்றாகவே கழுவுகிறார்கள்
செல்லும் பாதையெங்கும்
புன்னகைகளை
விரித்து வைக்கிறார்கள்...
வீட்டிற்குள் நுழைந்து
பானை மோர் அருந்துகிறார்கள்...
வேலையில்லாமல் இருப்பதைப் பார்த்து
மனமுருகி வருந்துகிறார்கள்.
புறம்போக்குக் குடிசையை
பட்டாவாக்க உறுதித் தருகிறார்கள்....
எப்போதும் தொடர்புகொள்ள
இணைப்புக் கிடைத்துவிடுகிறது...
அவர்களின்
உதிர சொட்டுகளெல்லாம்
மண்ணிற்கென்று முழங்கும்போது
தலை குனிந்து நிற்கிறோம்...
போகும்போது
செலவிற்குப் பணம் கொடுத்தவர்கள்
எங்களின் காலணிகளை எடுத்துத்
துடைத்து வைக்கிறார்கள்...
அவர்கள் நகர்ந்தவுடன்
எங்களின் கைகளில் ஆதாமின் ஆப்பிள்களும்
வீடு முழுவதும்
பாம்பின் தடங்களும் விரவி கிடக்கின்றன...
நாங்கள்
வெட்கத்துடன் நெளிகிறோம்.
- மு.முகமது பாட்சா*
07 /03 /2019
No comments:
Post a Comment