
அந்தக் கல்லறை தன்னைச்
சருகுகளால் மூடியிருக்கிறது
நிழலுக்காக வளர்த்த மரம்
அச்சமூட்டினாலும்
அழகான பறவைகளும்
இனிமையான சப்தங்களும்
நிறைந்திருக்கின்றன..
மரணம் முடிவல்ல என்று
வேர்கள் அதனை ஊடுருவுகின்றன...
வெளிச்சம்
அங்கும் விழத்தான் செய்கிறது...
சற்றுமுன் ஒரு நாகம்
ஓய்வெடுத்து நகர்ந்த தடம்...
பூக்கள் தூவ உறவுகள் மட்டுமே
போதுமென்பது முட்டாள்தனம்..
ஒரு ரோஜா பூத்திருப்பதை
வண்டுகள் ரசிக்கின்றன...
விசாலமான காற்றில்
பச்சை விரிப்பாகப் புல்தரை...
ஓடியாடும் சிறு அணில்கள் ...
காகத்தின் எச்சம் கோலமிட்டுக்
கோலமிட்டு ஒப்பனை அலங்காரம்..
எங்கோ கேட்கும் மூங்கில்களின் உரசல்...
அந்தக் கல்லறை
உறவுகளிழந்த நிர்வாணமல்ல.
- மு.முகமது பாட்சா*
15/04/2019
No comments:
Post a Comment