
ஆளாளுக்கு படிமங்களைத்
தேடிக் கொண்டிருந்தார்கள்,
நிலவைப் பிடித்து நிரப்பிக்கொண்டவர்கள்
குட்டைகளைக் கலக்கி
மீன்களையும் பிடித்தார்கள்...
ரோசாக்கள்
வீதியெங்கும் பூத்துக் கிடக்க
எனக்கு வெறும்
முட்கள் மட்டும்தான் கிடைத்தது...
என் பை
இன்னமும் காலியாகவே இருக்கிறது...
பறவைகளோடு சிலர்
பறந்து போவதையும் பார்க்கிறேன்...
உதிர்ந்த சருகுகளையும்
அவர்கள் அள்ளி வாரிக்கொண்டார்கள்...
உதவாத நெகிழிகளும்
ஏனோ சிலருக்குத் தேவைப் பட்டது...
இன்னமும் என் பை
நிரம்பாமல்தான் இருக்கிறது...
இப்போது நானும்
சில முட்களும் மட்டுமே இருக்க
அந்தப் பை என்னை
அலட்சியமாகப் பார்த்துச் சிரித்தது.
- மு.முகமது பாட்சா*
05/04/2019
No comments:
Post a Comment