
சமிக்கைகளைக் கடந்து
சென்று கொண்டிருக்கிறேன்...
சமிக்கைகள்
எதற்கானதென்று இன்னமும்
யாருக்கும் விளங்கவில்லை.
சாலையை நிறுத்தும் மஞ்சள் கோடுகள்
பிரயாணத்தை அழகாக்குகின்றன...
பச்சையும் சிகப்பும் அவ்வப்போது
ஓய்வெடுத்துக் கொண்டாலும்
மஞ்சள் மட்டும் கண் உறங்காமல்
விழித்துக் கொண்டிருக்கிறது...
சமிக்கைகளைக் கடந்து
சென்று கொண்டிருக்கிறேன்...
வேகவோட்டம் மிகையெடுத்தவன்
போகுமிடத்தைத் தவறவிட்டு
இரத்தமாய் விழுந்து கிடக்கிறான்.
நிதானம் என்பதும் சமிக்கைதான் ...
போகுமிடத்தை
நெருங்கிய பிறகுதான் உணர்கிறேன்...
இங்கு எங்குமே
சிகப்பும் இல்லை பச்சையும் இல்லை
ஆனாலும் சமிக்கை.
- மு.முகமது பாட்சா*
25/04/2019
No comments:
Post a Comment