
அவர்கள் இப்போதும்
வேகமாகத்தான் கடந்து போகிறார்கள்
கேள்விக் குறிகளை
குனிந்து பார்க்க
அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை....
அவர்கள் கையசைக்கும் முன்பாகவே
கொடிகள் காற்றில் அசைகின்றன...
அவர்களின் முகங்களைவிட
சின்னங்கள்தான்
முகபடாம்களாக உயர்கின்றது...
'நான் வந்தால்'
'நான் வந்தால்'
'நான் வந்தால்'
எதுவும் புடுங்கமாட்டார்களென்பது
எல்லோருக்குமே தெரியும்...
அவர்களின் கவலை
அவர்களைப் பற்றியதாகவே இருக்கிறது...
இப்போதும்
கீழிறங்கி வரத் தயங்குகிறார்கள்...
அவர்களின் உச்சரிப்புகளில்
மந்திர வார்த்தைகள் மறைந்திருக்கின்றன..
நாங்கள்
அவை மாயமான பிறகுதான் உணர்கிறோம்
அடிமை சாசனம் எழுதிக்கொள்ள
ஐந்து வருடம் இனியும்
காத்திருக்கவேண்டும் என்பதை...
நாங்கள் கைகளை ஆட்டுகிறோம்
கண்டு கொள்ளாமல்
அவர்கள் இப்போதும்
வேகமாகத்தான் கடந்து போகிறார்கள்
- மு.முகமது பாட்சா*
10/04/2019
No comments:
Post a Comment