
பாதையெங்கும்
வெளிச்சத்தைத் தூவிவிட்டு
இரவு என்கிறாய்...
நிழல் என்பதே இளைப்பாற என்பது
இங்கு யாருக்கும் புரியவில்லை.
ஆசை மட்டுமே
கனவுகளை வழி நடத்துகிறது...
சோலைக்குள் அமர்ந்து
பூக்களை இரசிக்காதவன் சோம்பேறி.
தாகத்தைக் கடும் வெயில்
கற்றுக் கொடுக்கிறது...
மரணத்தை மறந்தவன் மட்டுமே
உறவுகளை வெறுக்கிறான்...
நோய்கள் தேகத்திற்குப்
பாடங்களைக் கற்றுத் தருகின்றன...
சிரிக்க மறந்தவன்
சிந்திக்கத் தெரியாதவன்.
வெளிச்சம்
ஒரு புள்ளியில் தொடங்கி
கருந்துளைக்குள் மூழ்கிவிடும்...
சந்தூக்கு பெட்டி
சந்தனமாக இருந்தாலும்
நேரம் கடந்துவிட்டால்
பிணம் நாறத்தான் செய்யும்.
வெளிச்சத்தை
இதயத்தில் வைத்துக் கொண்டால்
இருட்டும் கூட
நடப்பதற்குச் சுகமானதுதான்.
- மு.முகமது பாட்சா*
19/04/2019
No comments:
Post a Comment