
சிகப்பு என்பதைப் பற்றிதான்
விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்..
சிகப்பென்பது புரட்சியென்று
ஒருவன் உரத்துக் கூறுகிறான்...
சிகப்பென்பது
உதிரத்தின் நிறமல்லவா! என்று
ஒருவன் வியப்புக் கூட்டுகிறான்.
சிகப்பு என்பதே சிந்தனையின்
வடிவம் என்று ஒருவன் புகழ...
இல்லையில்லை சிகப்பென்பது
வெட்டிமடம் என்று ஒருவன் ஏளனிக்கிறான்...
சிகப்பு என்பது அணுக்குண்டுகளென
ஆலை முதலாளிகள் அலற
ஆமாமாம் அஃதொரு தேசவிரோதமென
அரசு ஆணை பிறப்பிக்கிறது...
சிகப்பு என்பதே வறுமையின் நிறம் என்று
ஏழை விவசாயி கண்ணீர்விட...
சிகப்பென்பது வண்ணங்களின் பிதாமகனென
ஓவியன் அழகுறுத்துகிறான்...
சிகப்பு என்பது
சிகப்பே அல்லவென்று சொல்லும்
நிறக்குருடன்
நிலைகுலைந்து விழுந்தபோது
தூக்கிவிட்ட சிகப்பு
உதவி என்று தன்னைச் சொல்லிக் கொண்டது...
சிகப்பு என்பதே ஒரு
பேசுபொருள்தான் என்பது
இந்தக் கவிதைக்கு மட்டுமே நன்றாகத் தெரியும்.
- மு.முகமது பாட்சா*
30/04/2019
No comments:
Post a Comment