
மூளைகளைத் துவைத்து
அழுக்காக்கிக் கொண்டிருக்கிறார்கள்...
பூக்களாக நுழைந்த மதம்
புழுக்களாக
ஊடுருவிப் பன்றிகளாக வளர்கின்றன...
சாத்தான் கடவுளர்களின் கண்களைப்
பொருத்திக் கொள்கிறான்...
கால்களின் கீழ்
அன்பை மிதித்துக் கொண்டிருக்கிறார்கள்...
உதிரச்சுவை உன்னதம் என்று
வேதங்கள் எழுதப்படுகின்றன...
நம்பிக்கையென்பது
துப்பாக்கிகளின்
முனைகளில் உட்கார்ந்து கொள்ள
அக்னிக்குண்டுகள் ஆங்காங்கே
வெடித்துச் சிதறுகின்றன...
ஆதாமின் களிமண் சகதியாக மாறிப்போக
பன்றிகள் நாக்கினைச் சுழற்றி
நரகலை உண்ணும் வேளையில்...
ஏவாவின் தேவன் கடலுக்குள் நுழைந்து
பூமிக்குள் ஊடுருவுகிறான்...
ஒரு பிரளயத்தின் கதையை
பெரும் மின்னலொன்று எழுதிப்போக
காரூனின் புதையல்கள் மேலெழும்புகின்றன...
ஆலயங்கள்
அச்சத்துடன் கதவைத் திறந்து வைத்திருக்க...
மனிதத்தை
மதங்கள் தின்று கொண்டிருக்கின்றது.
- மு.முகமது பாட்சா*
28/04/2019
No comments:
Post a Comment