
இப்போதெல்லாம் வெளிச்சத்திற்கு
அதிகமான கைகள் முளைத்துவிடுகின்றன
சாமியாடி யாரையாவது
காவு வாங்கிக் கொண்டே இருக்கிறான்
விடிந்ததும் இரவைத்தான் தேடுகிறது மனசு...
வாய்களை ஒட்டிக் கொண்டுதான்
வெளியில் செல்கிறோம்...
சங்கேத மொழிகள் கற்றுக் கொண்டோம்...
பிரச்சனைகள் துணைக்கு வரும் போது
துப்பாக்கி முனைகளைப் பற்றி
எப்படிச் சிந்திப்பது ?
பலகீனத்தின் பெயர்தான் தைரியம் என்று
பாடுவது வழக்கமாகிவிட்டது...
எங்களின் சிரிப்பிற்கு முகமூடிகள் கிடையாது
ஆனாலும் அதை நம்பாதீர்கள்...
கோழைகளின் நகரம் பகல் என்று
ஒரு கவிதையை அவசரமாக எழுதிவிட்டுப்
பதுங்க வேண்டும் இரவிற்குள்...
வெளிச்சம் இரத்த வாடை வீசுகிறது.
- மு. முகமது பாட்சா*
13/07/2019
No comments:
Post a Comment