Tuesday, 30 July 2019

சன்னல் திரை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

குழுவாக அமர்ந்து 
பேசிக்கொள்ளத் தொடங்கினோம் 
எதிர் வீட்டுப் பிரச்சனைதான் என்றாலும் 
தனியாகக் குடிவந்திருக்கும் அவளைப் பற்றியதுதான் 
அவள் பெயர் என்னவென்று இதுவரை தெரியாது... 
பொதுவில் அவளுக்கு 
ஆகரி என்று பெயர் வைத்தவன் ரகுமான் ரசிகன் 
இரவில் பாடிக்கொண்டே இருப்பாள்.. 
வேலை நிமித்தம் வந்தவளாக இருக்கலாம் 
ஆனாலும் இரவில் அடிக்கடிக் காணாமல் போகிறாள்... 
நுரைத்த மதுவை 
தம்பளர்களில் ஊற்றிய இலக்கிய ரசிகன் 
அவள் ஒரு படிமக்குறியீடு எனப் பிதற்றத் தொடங்கினான்... 
சூர்யாவிற்கு ஏற்ற ஜோடி இவள்தான் என்றவன் 
ஓர் உதவி இயக்குனன் 
நான்கு வண்ணங்கள் அவசியம் தேவை 
அப்போதுதான் அந்த முகத்தின் புன்னகை வெளிவரும் 
என்று சிலாகித்தான் ஓவியம் பயில்பவன்... 
நானும் கலந்து கொள்ளவா? 
என்று அருகில் வந்தவள் 
பிரன்ச் நறுமணம் பூசியிருந்தாள்.... 
ஆச்சரியத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தோம்...
தன் பெயர் ஆகரி என்றவள் 
வேலைத்தேடுவதாகச் சொன்னாள்...
குறும்படமொன்றில் 
நடிப்பதாகச் சொல்லிவிட்டுப் புன்னகைத்தாள்.. 
நான்கு வண்ணங்கள் 
அவளின் முகத்தில் பிரதிபலித்தது... 
அவர்கள் அவளையே பார்த்துக் கொண்டிருக்க 
அவள் வீட்டின் சன்னல் திரை 
மெல்ல அசைந்து கொண்டிருந்தது 
அவளின் நிழல் பாட்டொன்றைப் பாடிக் கொண்டிருக்க... 

- மு.முகமது பாட்சா*
30/07/2019

No comments:

Post a Comment

Popular Posts