
நீயும் நானும்
கனவுகளைப் பெட்டியில் போட்டுப்
பூட்டி வைத்திருக்கிறோம்....
அதனுள்ளிருந்து
அவ்வப்போது மீகமச் சங்கீதம் இசைக்கிறது...
இரவை
அச்சத்துடன் நெய்யும் நிலவை இரசிக்கிறோம்...
வானம் முழுவதும்
துப்பாக்கிகளின் ஓசை
நட்சத்திரங்களாய் துளைப் போட்டிருக்கின்றன...
உனது எல்லையும் எனது எல்லையும்
வேலிகளைத் தகர்த்து
காதல் தேசத்தைக் கட்டமைக்க...
உன்னையும் என்னையும் பிரிக்க
உரிமைச் சீட்டுகளால் மட்டுமே முடியும்....
நீ என் தேசத்துத் துரோகியென்றும்
நான் உன் தேசத்துத் துரோகியென்றும்
இராணுவத்தின் கண்கள் தேடிக் கொண்டே இருக்கட்டும்...
எல்லைகளைக் கடந்த பிறகும்
காதலென்பது காதல்தான்
விடியும் வரை நன்றாக வெடிக்கட்டும்
அவர்களின் விடிவிற்குள் வராத பட்டாசுகள்...
விடிந்த பிறகு
அவர்களே மூடி வைத்துவிடுவார்கள்
நம் கதையை இரத்தச் சகதியில்....
அப்போது இந்தக் கனவுப் பெட்டி
எந்த எல்லையில் புதைக்கப் பட்டிருக்கும்?
- மு.முகமது பாட்சா*
23/07/2019
No comments:
Post a Comment