Sunday, 14 July 2019

உதிர அழுத்தம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் குளோஸ் அப்

நானெழுதிய அந்த ஒற்றை வரி 
என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது 
எனக்கும் அதற்கும் சில சச்சரவுகள் உண்டு... 
அடுத்த வரியை எழுத மாட்டேன் என 
இறுமாப்பில் இருக்க... 
தான் உறங்கிவிட்டதாகப் பொய்க்கதை புனைகிறது 
அமைதியில் நகரும் அப் பொழுது 
ஆடைகளைக் களைந்து கொண்டு வெளியேற 
அவ்வரியை 
அழித்துவிடுவதென முடிவெடுக்கிறேன்... 
மசியைக் கொட்டி மறைத்தபின் 
வாய் திறந்த குப்பைக்கூடைக்குள் எறிகிறேன்..
ஆனாலும் 
சன்னல் வழியாக எட்டிப்பார்த்த அந்த வார்த்தை 
உள்ளே வரலாமா எனக் கேட்கிறது
நீ இறந்து விட்டாய் போய்விடு எனச் சப்தமிடுகிறேன் 
உன் மூளைக்குள்தான் நான் 
உட்கார்ந்திருக்கிறேன் என்று சிரிக்கும் 
அதன் ஆணவச் சிரிப்பில் 
நரம்புகளின் உதிரஅழுத்தம் எகிறித்தொலைக்க 
நான் இறந்து விட்டதாகச் சிலர் சொல்லிவிட்டு 
என்னருகில் நின்று 
அழுது கொண்டிருக்கிறார்கள். 

- மு. முகமது பாட்சா*
15/07/2019

No comments:

Post a Comment

Popular Posts