
கால்களைக் கட்டிவிட்டு நடக்கச் சொன்னார்கள்
எம்பிக் குதித்து நகர்ந்தோம்
கைகளை
அவர்கள் சொல்லாமலேயே கட்டிக் கொண்டோம்
வராத வார்த்தைகளைப் பேசுவதற்கு அச்சப்பட்டு
வாய்களை மூடிக் கொள்கிறோம்
நாங்கள் அணிந்திருக்கும் கண்ணாடிகள்
காட்சிகளை மாற்றி அமைக்கிறது
நாங்கள் பூட்டப்பட்ட இந்த அறையில்தான்
ஒரு கத்தியும் சில துப்பாக்கிகளும் இருக்கின்றன
ஆனாலும் சாவிக்காக
மெல்லிய குரலில் விசும்புகிறோம்
செயலிழந்த வானொலி பெட்டியொன்று
அடிக்கடி தேசிய கீதம் இசைக்க...
வலையறுத்து உள்ளே நுழைந்த எலியொன்று
எங்களைப் பார்த்துவிட்டு நகர்கிறது
நகங்களால் எங்களைக் கீறிக் கொள்கிறோம்
வியாபார நிமித்தம் திரிகிறவர்கள்
இதையெல்லாம் நிச்சயம் பார்க்க மாட்டார்கள்
அவர்களுக்கு இப்படியொரு அறை இருந்ததே
மறந்துவிட்டிருக்கக் கூடும்.
- மு.முகமது பாட்சா*
15 /05 /2018
No comments:
Post a Comment