
அந்த முகம் அவளுடையதில்லை
அந்தப் பெயரும் கூட இரவல்தான்
பாண்டி விளையாடியக் காயங்கள்
பருவத்தின் போது பார்த்த பார்வைகள்
எதுவுமே அவளுடையதில்லை...
ஒட்டிப் படர்ந்த அம்மாவின் நிழலும்
அப்பனின் துப்பறிவும் கவசம்தான் என்றாலும் ....
அவளின் நிழல் அவளுடையதில்லை
அவளே இன்று அவளிடமில்லை
அடையாளமிட்ட கயிற்றுக்குள்
யாரோவொருவன்
தினந்தினம் ஆடிக் கொண்டேயிருக்கிறான்
மெட்டிக்குள்ளிருந்து ஒரு மெல்லியச் சங்கிலி
அவன் விரலுக்குள்
மோதிரமாக வந்து உட்கார்ந்து கொள்கிறது
ஆம்
அவளின் அடையாளம் அவளுடையதில்லை
அவளின் மனமும் அவளுக்கானதில்லை
எழுதியக் கவிதைகளை முகர்ந்து பார்க்கிறாள்
எழுதாத வார்த்தைகள்
அவள் முகத்தையே பார்க்கின்றன....
எழுதியவள் பெயரும் அவளுடையதில்லை
அவளுக்கான ஆதாரம் அதிலெதுவுமில்லை
- மு.முகமது பாட்சா*
09 /05 /2018
No comments:
Post a Comment