Tuesday, 29 May 2018

நாடோடியின் நகரம்

ரமலான் 14
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

நகரத்தின் அசுர வாழ்க்கையில் 
விழுந்து விட்டோம் 

தேசாந்திரியின் சுதந்திரத் தனிமை 
யாருக்குக் கிடைக்கும்? 

சூஃபிகளின் கூடாரங்களை 
வெறுக்காதீர்கள் 
அஃதொரு நகர்ந்து செல்லும் வீடு! 

படைப்புகளின் ரகசியம் அறிந்தால் 
சாத்தானின் வலையில் 
யாரும் விழ மாட்டார்கள் 

ஒருவேளை வனத்தில் கண்விழித்தால் 
சருகுகளின் கம்பளம் காண்பீர்கள் 

வண்ணப்பூக்களின் சொறிவு 
பாதைகள் முழுவதும் நிறைந்திருக்கும் 

நாம் சுவாசிக்கும் காற்றுதான் 
வாழ்க்கையை வாசிக்கிறது 

முத்தெடுக்க 
யாரும் கடலுக்குள் மூழ்கவேண்டாம் 
பயணம் செய்யுங்கள் 

நாம் எல்லோருமே பயணிகள்தான். 

சுத்தமான காற்றைத் தேசாந்திரித் தவிர 
யாரும் சுவாசிக்க முடியாது 

பனி 
காற்று 
மழை 
குளிர் 
எத்தனை மகிழ்வுகளைத் தொலைத்துவிட்டு 
செயற்கை குளிரூட்டிக்குள் 
சிலிர்த்துப் போகிறோம்! 

சூஃபிகளின் பள்ளி விசாலமானது 
அங்குப் பறவைகள் 
இனிமையாகப் பாங்கு சொல்லும் 

அருவிகளில் ஒலுவெடுக்கும் நற்பேறு 
நாடோடிகளுக்கு மட்டுமே 
கிடைக்கிறது... 

நகரத்தின் வாழ்க்கைக் குப்பையானது 
நகரத்தின் முகம் போலியானது 
நகரத்தின் வேசம் அறுவெறுப்பானது 

மொத்தத்தில் நகரம் நரகமாகிவிட்டது.. 

- மு.முகமது பாட்சா* 
30 /05 /2018

No comments:

Post a Comment

Popular Posts