
ஒன்று என்பது இடம் மாறும்போது
மதிப்பும் மாறிவிடுகிறது
எண்ணிக்கைகள் எப்போதுமே
விரல்களுக்குள் அடங்கிவிடுவதில்லை
சுழியம் என்பதை விட்டுவிட்டு
யாரும் கணக்கிற்குள் நுழைவதுமில்லை
பெரிய எண் என்பதை
சிறிய எண் வகுக்கத் தொடங்கிவிட்டால்
சுழியத்திற்குள் ஐக்கியமாகிவிடும்
கூட்டலில் கூடிய எண்கள்
கழித்தலில் மதிப்பிழந்து போகும்
பெருக்கல் என்பது எப்போதுமே
நம் உறவுகளின் சங்கிலி
எல்லோருமே
கதவுகளை மூடிவிட்டுத்தான்
காற்று வரவில்லையெனப் புலம்புகிறோம்
முதலிடம் என்பது
கடைசி இடத்தைக் கணக்கிலெடுப்பதில்லை
கடைசியிடம் மட்டும் இல்லையென்றால்
முதலிடத்திற்கு இங்கு மதிப்பேயில்லை
கணக்குகளைத் தவறாக மதிப்பாய்கிறோம்
கணக்குகள்தான்
நம்மைக் கூட்டி கழிக்கின்றன
ஆனாலும் தவறான விடைகளுக்கு
நாம் மட்டுமே
சொந்தம் கொண்டாடி வருகிறோம்.
- மு.முகமது பாட்சா*
14 /05 /2018
No comments:
Post a Comment