
சிறிய கோடென்றுதான்
நானதனை நம்பியிருந்தேன்,
சற்று நிமிர்ந்து பார்த்த போது
அஃது ஆல மரமாகத் தெரிந்தது,
காற்று வந்து
அதனை வளைத்த போது
கேள்வியொன்று என்னை
எதிர் கொண்டது...
நிழலூன்றி நின்றக் கோடு
வேர்களை என் விலாவிற்குள்
படரவிடுகின்றது...
இலைகளையும் காய்களையும்
சுமக்கத் தொடங்குகிறேன்
பறவைகள்
தலையில் கூடுகட்டுகின்றன
பல நூறு கோடுகளை
நிழல் இப்போது
எளிதாக வரையத் தொடங்குகிறது
ஒவ்வொன்றும்
அட்சரங்களாக வளைந்து
வார்த்தைகளை
வடிவமைக்கின்றன...
மூலக் கோட்டினைத் தேடி
வார்த்தைகள் பயணிக்கும் பாதையில்
என் நிழலைக் கண்டால்
யாராவது சொல்லுங்கள்
நான் இன்னமும் அங்கேயே நிற்பதாக.
- மு.முகமது பாட்சா*
08 /05 /2018
No comments:
Post a Comment