Wednesday, 16 May 2018

பசியின் திருவிழா

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உணவு மற்றும் உட்புறம்

ரமலான் 1

சுவனத்தின் வாசம் பூமியில் இறங்கி வர 
பசியின் திருவிழா இனிதே தொடங்குகிறது 

கருணையின் கண்கள் திறந்து கொள்கின்றன 

இரவுகள் வெளிச்சம் பூசிக் கொள்ள 
பள்ளிவாயல்களின் பாசம் நிரம்பி வழிகின்றது 

புறாக்களுக்கு முன்பாகவே 
திக்ருகள் விழித்துக் கொள்கின்றன 

பஜ்ரின் வாசம் காற்றில் கலந்து வர 
பசியின் நேசம் கண்விழித்துப் பார்க்கிறது 

தர்மத்தின் கதவுகள் திறந்தே கிடக்கின்றன 

உறக்கம் என்பது உன்னதமாகிப் போனது 

புனித திருமறை தன் சிறகினை விரிக்க 
மலர்கள் 
வாசலைத் திறந்து வைத்துக் கொள்கின்றன 

மாளிகைக் கைகளும் 
நோன்பு கஞ்சிக்காகக் கையேந்தும் அதிசயம் 

யாசிப்பவனும் யோசிப்பவனும் 
ஒன்றாகவே உணவருந்துகிறார்கள் 

ஈகை மட்டுமே இதயத்தில் அமர்ந்து கொள்ள 
தராவிஹ் தொழுகை சங்கையாக நடைபெறுகிறது 

சாத்தானின் கால்கள் கட்டப்பட்டிருக்கின்றன 
சபிக்கிறான் அவன் இந்த மாதத்தை. 

- மு.முகமது பாட்சா* 
17/05/2018

No comments:

Post a Comment

Popular Posts