
கவிதையின் நான்காம் வரியில்
ஒரு செடி முளைத்திருந்தது...
விரல்களே இல்லாதவனிடம்
ஓர் ஆட்டுக்குட்டி வளர்வதாக
சிறுகதையொன்று சொல்லுகிறது...
நடிகையின் பக்கம்
நிர்வாணத்தில் தோய்ந்திருக்க
சன்னலைத் திறந்தால்
காற்று வரும் சேதியாக ஆனந்தர் பேட்டி
காவிரி ஏன் வரவில்லை என்பது
ஓர் அரசியல் கட்டுரையாம்
சாமி தரிசனம் அடுத்து
சமையல் குறிப்பில் கருவேப்பிலை
சன்னலைத் திறந்து பார்க்கிறேன்
தொழு நோயாளியொருவன்
ரோசாப் பூக்களைப் பறித்துப் போகிறான்
கருவேப்பிலைக் கன்றை
ஆடொன்று மேய்ந்து கொண்டிருக்க
கேன் தண்ணீர் தீர்ந்து விட்டதாக
உள்ளிருந்து ஒரு குரல் அறைகிறது
நடிகையின் புழுக்கம்
தொலைக்காட்சியில் வழிந்து கொண்டிருக்க
புத்தகத்தின் கதவை மூடுகிறேன்
காற்று மெல்ல அறைக்குள் நுழைகிறது.
- மு.முகமது பாட்சா*
01/05/2018
No comments:
Post a Comment