Friday, 21 June 2019

சிக்கலானவன்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

நான் 
என் மொழியோடு பேசிக்கொண்டிருக்கிறேன் 
உங்களுக்கு ஏன் வலிக்கிறது? 
என் விசும்பல்கள் 
இலக்கணச் சுத்தமாய் இசைக்க 
அஃதென்ன சங்கீத மேடை கச்சேரியா? 
என் காதலின் மொழி 
மிகவும் சிக்கலானது... 
காதலையே பொய்யென்று இகழ்வீரோ? 
மாடத்தியை 
அம்மனாக்கி வழிபடும் முன் 
அவளின் அழுகையின் விசும்பல்களை 
எந்தச் சரகத்தில் 
சுமைகல்லாய் நிறுத்தி வைப்பீர்கள்? 
தேனைச் சுவைக்கும் முன்பாகவே 
கூட்டின் சிக்கல்களைப் பற்றி ஆராய்கிறீர்கள்... 
கல்லறைகளின் வாசகங்கள் 
எப்போதும் கல்வெட்டில்தான் இருக்கும்... 
நான் 
படிமத்திற்குள் நுழைந்து வெளி வருகிறேன் 
நீங்கள் என்னைப் 
பாட்டிற்குள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்... 
என் விரல்களின் இசைக் குறிப்புகளையெல்லாம் 
நீங்கள் எப்படி எழுத முடியும்? 
- இப்படிக்கு 
என்றும் உங்கள் சிக்கலானவன். 

- மு. முகமது பாட்சா*
21/06/2019

No comments:

Post a Comment

Popular Posts