
உக்கிரத்தாண்டவ
ஜதிகளைத் தப்பாமல் ஆடுகிறாய்
உதிரத்துளிகளின் வீசலில்
உரசிச் செல்கின்றன எழுத்துகள்...
சுக்கிலமுறைந்து சூள் கொள்ளுமோ சுடரே...
பத்திரு விழிகளும் பற்றிக் கொள்ளப்
பகல் கனவு என் செய்வேன்?
கட்டறுவோடம் கடலலம்பச் சுற்றலில்
மூழ்குமோ? மீளுமோ?
கரையின் விளும்பிலடி அலையின் நுரை
எழுதும் வார்த்தைகள் யார் அறிவார்?
ஒற்றையடியுதவா வார்த்தைகளெல்லாம்
கற்றை மொழியெனக் கர்வம் சூட...
இற்றையில் நிற்கும்
இகலோனை நானென் செய்வேன்?
தப்படி, தரையடி, சுற்றிச் சுழன்று காற்றாய்
சூழ்ந்தடி...
மொட்டவிழ்ந்து மலரா மனமெல்லாம்
கெட்டழிந்து போகட்டும் அரு ரூபனே!
-மு. முகமது பாட்சா*
15/06/2019
No comments:
Post a Comment