Thursday, 20 June 2019

ஒத்திசை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ஒரு மாபெரும் இசைக் கூட்டலுக்கான மேடை 
நிசப்தம் பூசியிருக்கிறது... 
இமைகளினசைவில் 
ஒரு மெல்லிய ரீங்காரம் இழையோட... 
இதயத்தினருகில் 
தொம்!....தொம்!....தொம்!.... 
டிரம்ஸின் இடைவிடும் சப்தம் மெல்ல எழும்ப... 
அவளென்னை அருகில் சுவாசிக்கிறாள்.... 
திரைச்சீலை மேலே எழும்புகிறது.... 
என் சுவாசம் கீழிறங்கி வாசிக்க... 
பீத்தோவன் 
பியானாவிற்குள் நுழைந்து கடத்துகிறான்... 
அவளென் விரல்களை இறுகப் பற்றுகிறாள்... 
நான் மோஸார்ட்டை துணைக்கழைக்கிறேன்... 
ஒத்திசையில் வயலின்கள் ஒன்றிழைய... 
மாத்தேயோ கார்காசி 
கிடாருடன் நரம்புகளைச் சுண்டியிழுக்கிறான்... 
வானம் கீழிறங்கி வருகிறது.... 
நான் எங்கிருக்கிறேன்.. 
எங்கிருக்கிறேன்... 
எங்கிருக்கிறேன் என மெல்ல இழையும் வயலின்கள் 
வருகிறாயா போவோம் 
என்ற உச்ச ஸ்தாயிக்கு நகரும் போது 
எங்களை நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்... 
மழை விடும் முன்பாகவே சொனாட்டிவிற்கு 
கவிதைகளை எழுத எத்தனிக்கிறோம்.... 
பீத்தோவனின் காதுகள் 
எங்களையே கவனித்துக் கொண்டிருக்கின்றன.

- மு.முகமது பாட்சா*
21/06/2019
(இன்று உலக இசைதினம்)

No comments:

Post a Comment

Popular Posts