
காணாமல் போன ஒன்றைத்தான்
தேடிக் கொண்டிருப்பதாக
அவர்கள் சொல்கிறார்கள்...
அந்த ஒன்று என்பது அவர்களுக்கு அஃறிணை
காணாமல் போனதைக்
கண்டு பிடித்துவிட்டதாகச் சொன்னவர்கள்
கண்டுபிடித்தது இப்போது
காணாமல் போய்விட்டதாகச் சொல்கிறார்கள்
காணாமல் போனது
கிடைக்காமல் போய் விடுமா என்ன?
கிடைத்துவிட்டால்
அது கிடைத்த ஒன்றாகவே மாறிவிடும்...
எனவே
காணாமல் போனது கிடைக்கும் வரை
காணாமல் போனது காணாமல் இருப்பதுதான்
நல்லதென்று சொல்கிறார்கள்...
நீங்களும் இந்தக் கவிதையைப் படித்ததும்
மறந்துவிட்டால் பிரச்சனையில்லை...
தொலைந்தது என்று
கோப்பினை மூடி வைத்துவிடுவார்கள்..
- மு. முகமது பாட்சா*
19/06/2019
No comments:
Post a Comment