
'பனைமரக் காட்டை நீ பார்த்துக் கொள்'
மெதுவாகச் சொல்லும்போதே மூச்சிரைத்தது...
'அங்குதான் உன் பாட்டியும்
பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருக்கிறாள்'
சிரித்தவர்
வேறு எங்கோ நடந்து செல்கிறார்..
நானும் கூடவே போகிறேன்...
கயிறு கட்டில் வாசத்தை நுகர்ந்திருக்கிறாயா?
அவர் கையை மெதுவாக அழுத்துகிறேன்
என்னையே சற்று நேரம் பார்த்தவர்
'தாயம் விளையாடக் கற்றுக்கொள்
தந்திரமறிந்தால் மட்டுமே பிழைக்க முடியும்!'
என்றவர் கையைப் பிடுங்கிக் கொண்டு
உன் அம்மாவின் வாசனை
உனக்குத் தெரியுமா? தெரியாதா?
என்று முறைத்தார்...
நான் தலையை மட்டும் ஆட்டினேன்...
'என் அம்மாவின் வாசனை
உன் பாட்டியின் கைகளில் இருக்கிறது தெரியுமா?'
என்றவரின் இளம் முறுவல்
இதயத்தை
உதடுகளில் வரைந்தது போல் நெளிந்தது...
'அவர் உளறுகிறார்' என்று சுற்றத்தார் சொல்கிறார்கள்
ஏதோ உண்மையைச் சொல்கிறார்
என்பது மட்டும் எனக்குப் பிடிபடுகிறது...
- மு.முகமது பாட்சா*
28/06/2019
No comments:
Post a Comment