
பேரண்டத்தின் பெருமுனையில்
சிறு கயிற்றைப் பிடித்து
நகர்ந்து கொண்டிருக்கிறோம்...
நதிகளை நக்கிய நாய்கள் இப்போது
நாவரண்டு தவிக்கின்றன...
நிலம் நீர்ச் சத்தை இழந்துவிட்டது...
கடலேன் உப்புக் கரிக்கிறது என்பது
இப்போதுதான் விளங்குகிறது...
மேகங்களையும் திருடுகிறார்கள்...
குடங்களின் பெருமூச்சு
குடிசைகளுக்குள்ளிருந்தான் வருகிறது...
இனி உலகத்தில் விலையுயர்ந்தது
தங்கமல்ல தண்ணீர்தான்...
அதற்காகத்தான் நாங்கள்
அடித்துக் கொள்ளப் போகிறோம்....
அதற்காகத்தான்
நாங்கள் ஆயுதம் ஏந்தப் போகிறோம்...
முலைகளை அறுத்துவிட்டு
முழுவதுமாகப் பால் குடிக்க ஆசைப் பட்டவர்கள்
முகவரி தேடுகிறோம்
தண்ணீர்தான் இனி எங்கள் விலாசம்.
- மு.முகமது பாட்சா*
14/06/2019
No comments:
Post a Comment