
ஒரு கடலை உருவாக்கும் முன்பு
எனக்கான தோணியைத் தயார் செய்து கொள்கிறேன்...
தூண்டிலுக்காக வளையும் குச்சி தேவைப்படுகிறது
மீன்கள் இல்லையென்றால்
அதனைக் கடலென்று யாரும் சொல்லுவதில்லை...
கடல் இருந்தால் காற்று வேண்டாமா?
காற்றுக்காக மரங்களை வளர்க்க வேண்டும்....
மரங்கள் மட்டும் இல்லையென்றால்
கடல் நகரங்களை விழுங்கிவிடுவது சுலபமாகிவிடும்..
நகரங்கள் வாழ்வதற்கே
கிராமங்கள் மிக அவசியமாகிறது....
கிராமங்கள் உருவாக்கும் முன்பாக
குளம் குட்டைகளை வெட்டியாக வேண்டும்...
குளம் குட்டைகள் நிரம்புவதற்கு மழை வர வேண்டாமா?
மழை வருவதற்கு
நான் மேகங்களை வரையும் முன்பாக
கடலை உருவாக்கினால்தான் அது சாத்தியமாகும்...
அதனால்தான்
ஒரு கடலை உருவாக்கும் முன்பு
எனக்கான தோணியைத் தயார் செய்து கொள்கிறேன்...
- மு. முகமது பாட்சா*
20/06/2019
No comments:
Post a Comment