
நான் எழுதி வைத்த கவிதைகளை
1232 வதுதடவையாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்
சில கவிதைகளை
அந்துப்பூச்சிகளின் வாழ்வாதாரத்திற்காகச் செலவிட்டேன்
என் மீதான வஞ்சத்தை
சில கவிதைகளின் மீது காட்டின எலிகள்...
நானே வாங்கி வந்த உளுந்தம் பருப்பை
என் கவிதையின் தாளொன்று வாசித்துக் கொண்டிருந்தது...
ஆனாலும் என் கவிதைகள்
கவிதைகளாகவே வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்...
நான்+ கவிதைகள் = பரிதாபங்கள்!
கவிதைகள் + நான் = கண்டுகொள்ளாதவர்கள்
மற்றொருவரின்
கவிதையொன்றுதான் என்னை ஒப்பனை செய்தது...
இரட்சிப்பை - றட்சிப்பு என்றும்
பெயரை வடமொழியில் பின்னிக்கொண்டும் எழுதினேன்...
கட்டுரையெழுதி கவிதையென்றேன்... இப்போது
கைத் தட்டல்கள் = கவிதைகள் + நான்
பிழைகள்
பாராட்டு விழாக்களை நடத்துகின்றன....
ஆனாலும் கவிதைகளை மட்டும்தான்
நான் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்
1233 வது தடவையாக ...
- மு.முகமது பாட்சா*
12/06/2019
No comments:
Post a Comment