
எடுத்து வந்த கடலை
விரித்துப் பார்க்கிறேன்...
சிப்பிகள்தான் அதிகம் இருந்தது...
சிப்பி என்பது வீடா? அல்லது கூடா?
வீடென்றால்
நாங்கள் தொலைத்த வீடும்
கூடென்றால் கட்ட மறந்த
குருவிகளின் கூடும் நினைவிற்கு வரும்...
குருவிகளின் கூட்டில்
தங்கிவிட ஆசைதான்...
கானகத்தை அடைகாக்கும்
கருவறை அதுதான்...
கருவறை என்பது இப்போதெல்லாம்
அடிக்கடி கழுவி விடும்
கழிவு நீர்த் தொட்டியாகிவிட்டது...
ஆசைகளின் விளைச்சல்தான்
குழந்தைகளா?
பெற்ற குழந்தையைக் கொன்றுவிட்டால் தாய்...
கள்ளக்காதலன் தலைமறைவாகிவிட்டான்...
காதல் என்பதுதான் என்ன?
தேகம் வியர்த்ததும்
மோகத்தில் யாகம் வார்ப்பதா?
யாகம் வார்த்தும்
மழை வரவில்லையென்றால்
நதி எங்கே போகும்?
கடலின் கண்கள் காத்திருக்கின்றன...
ஒரு நீண்ட
காதல் கவிதையை எதிர் நோக்கி.
- மு. முகமது பாட்சா*
12/06/2019
No comments:
Post a Comment