
மேய்ப்பன் துறட்டிக் கோலால்
வானத்தை ஒட்டடையடிக்கிறான்...
மீதமிருந்த ஆடுகள்
காட்டின் அழுகையை வாங்கிக் கொள்ள
விழுந்து கிடந்த மரங்களில்
உறவுகளைத் தேடுகின்றன பறவைகள்
அழுகியப் புற்களில்
அவலத்தின் மிச்சங்கள் ஒட்டிக்கிடக்கிறது
இறந்துபோன ஒருவனைக் காகம்
பின் தொடர...
பூமியின் பால் நரம்புகள் அறுந்துகிடப்பதாக
வழிப்போக்கன் பாடுகிறான்...
கடலுக்குள் நுழைந்த கிராமங்களை
கோடாங்கியின்
உடுக்கைச் சப்தம் அதிர்வோடு எழுப்புகிறது....
ஒரு துண்டு ரொட்டிக்காக
ஏங்கிக் கிடக்கும்
தாயின் மார்பில் துளையிட
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன
ஆடுகள் இப்போது
செய்தித்தாள்களை மேய்ந்து கொண்டிருக்க...
மேய்ப்பனின் குரல்வளையில்
மெல்லிதாக எழுகிறது ஒரு கேவல்.
- மு.முகமது பாட்சா*
24 /11 /2018
No comments:
Post a Comment