
இருண்மைக்குள் நுழைந்த வார்த்தைகளை
மெல்ல மீட்டெடுக்கிறான் நாடோடி
கோடுகளை இழுத்து உழன்ற காற்றில்
பிக்காஸோவின் கையொப்பம் அடியில் இருக்கிறது
அரூபம் பூசிய வயல்களில்
யார்தான் நிறங்களைப் பூசுவது?
வானத்தை மட்டும் தீட்டிவிட்டு நகர்கிறான் ஓவியன்
இறகுகள் சேகரிப்பவனின்
வீட்டிலெழும் சப்தம்
வானத்தோடு வனத்தையும் தேடுகிறது...
வாடிய மலர்களில் தேனெடுக்கின்றன
நாற்காலி கதண்டுகள்...
இதன் சந்தங்களை ஒப்பாரிப் பாடலென்று
நாட்டுப்புறத்தான் பாடிக் கொண்டிருக்க
இல்லையில்லை
இது கூத்துதானென்று சிரித்துக் கொண்டிருக்கிறான்
சிங்காரத்தீவின் அரசன்.
- மு.முகமது பாட்சா*
26/11/2018
No comments:
Post a Comment