
நான் எனக்குள்
புதைந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டேன்...
என் எழுத்துகளில் புதைந்திருப்பதாக
வார்த்தைகள் சொன்னது....
என் சிறகுகளை ஒருவன்
பிடுங்கிச் செல்கிறான்...
நடக்கவே தெரியாதவனுக்குப் பறக்கவா ஆசையென்று
கனவுவெளியில் காலூன்றி நடந்ததை
அவன் பார்த்ததேயில்லை...
மலர் வளையத்தைக் கையில் கொடுத்தவன்
உன் சாவுக்குச் சமர்ப்பணம் என்கிறான்
தேநீர் நிரம்பாத அந்தக் கோப்பை
காலியாகவே இருக்கிறது...
சுவைப்பது போல் பாவனைச் செய்கிறேன்
மசி நிரப்பாத பேனாவினால் எழுதிய கவிதை
காலின் கீழ் ஓடிக் கொண்டிருக்கும் நதியில்
மெல்ல நழுவுகிறது
நான் ஒவ்வொன்றாக உதிர்கிறேன்...
சிறு புல்லின் வேராகவும் இருக்கத் தெரியாமல்!
-மு.முகமது பாட்சா*
20/11/2018
No comments:
Post a Comment