
வார்த்தைகளைப் பத்திரப்படுத்தியவன்
சொல்லடுக்குகள் சரிந்துவிடாமலிருக்க
நிழல்தொடாத
கோபுரக்குடில்களை வடிவமைத்தான்...
வாசலில் நாலைந்து வார்த்தைகளைக்
காவலுக்கும் வைத்தான்
உறைந்த நிலையில்
எதை எதையோ முணுமுணுக்கத் தொடங்கினான்....
பித்தனென்று சிலர் பிதற்றிப்போனார்கள்
சித்தம் கலங்கியவன் எப்படிக்
கவிதைகளில் சீரெடுப்பான் என்று சொன்னார்கள்
அத்துணைக்கும் கலங்காமல்
ஆயுள்யம் கரைத்தவனைப் புற்றுச் சூழ்ந்திருந்தது
எங்கே உன் கவிதை என்று கேட்டவர்களை
சிரித்துவிட்டு
அஃது இந்த அறைக்கு வெளியே
உலாவி கொண்டிருப்பதாகச் சொன்னான்...
வார்த்தைகளுக்குள் உறைந்து இறந்துவிட்டதாக
அவனைப் பிரகடனம் செய்தவர்கள்....
குடிலையும் அவசரமாகப் பிரித்தார்கள்
அதனுள் வானமொன்று
அழகான நட்சத்திரங்களை மின்னவிட்டு
ரசித்துக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்து போனவர்கள்
ஆளுக்கொரு கவிதையுடன்
வெளியே சென்று கொண்டிருந்தார்கள்
- மு.முகமது பாட்சா*
28/11/2018
No comments:
Post a Comment