Thursday, 21 June 2018

காணாத செய்தி

தானியங்கு மாற்று உரை இல்லை.

இந்தக் கவிதை சற்றுப் புரியாமல்தான் இருக்கும் 
வார்த்தைகள் கிடைக்காத வறுமையாக இருக்கலாம்
ஆனாலும் அரசியல்தான் பேசுகிறது 
புல்லை நட்டுவிட்டு 
போதிமரம் வளர்ந்ததாகச் சொல்கிறவன் 
நிழலைத் தேடுகிறான்
குற்றவாளிகள் வெளியில் இருக்க.... 
சிறைச்சாலைகள் எப்போதும் நிரம்பியே வழிகின்றன 
கஜானாப் பெட்டியின் சாவியை 
ஏழு மலைத் தாண்டி கிளியொன்று வைத்திருக்க 
பூட்டை கோழிக் குஞ்சுகள் அடை காக்கின்றன 
நிழல்திரைக்கு விசில்கள் பறக்கின்றது 
கட்டையவிழ்த்த 
நீதி தேவதையின் கண்களைக் காணவில்லை... 
சர்ப்பமொன்று தேச வரைபடத்தின் மீது ஊர்கிறது 
நாய்கள் ஊளையிடுகின்றன 
இடுகாட்டுக் குழிகளில் 
எழுத்துகளைப் புதைத்துக் கொண்டிருந்தவர்கள் 
தேசக்கொடிக்கு முத்தமளிக்க 
காந்தி இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறார் 
தற்குறிகள் இராஜ மகுடத்தில் சல்லாபிக்க 
கேள்விக்குறிகள் 
தூக்குக் கயிற்றில் தொங்க விடப்படுவது வழமைதான் 
இப்போதுதான் சற்றுமுன் வந்த செய்தி 
ஒரு மூதாட்டியை, சமூக ஆர்வலரை, 
மற்றுமொரு நடிகையையும் 
காணவில்லை! 
எழுத்தாளன் காணாத செய்தியில் 
எழுத்துகளையும் காணவில்லையென்பது மிக முக்கியம்.

- மு.முகமது பாட்சா*
21 /06 /2018

No comments:

Post a Comment

Popular Posts